Tamil Short story - Sulal Pandhu
சுழல் பந்து
எப்பவாவது கிரிக்கெட் பார்த்திருக்கீர்களா ? கடைசி பாலில் ஜெயிக்கப்போவது எந்த அணி என்று பதறி இருக்கிறீர்களா ? இதயம் படபடக்க நீங்கள் சப்போர்ட் செய்யும் அணி வெற்றி பெற வேண்டும் என இறைவனை வேண்டி இருக்கிறீர்களா ? சீட்டின் நுனியில் உட்கார்ந்து பதறிக் கொண்டு இருந்திருக்கீர்களா ?
உங்களுக்குத்தான் அது பதற்றம் . எனக்கு இல்லை . யெஸ் . நீங்கள் நினைத்தது சரிதான் . நான் ஒரு புக்கீ . எந்த விளையாட்டில் எந்த அணி ஜெயிக்கும் . எந்த அணி தோற்கும் . யார் எவ்வளவு ரன் எடுப்பார்கள் . மேட்ச்சை கடைசி ஓவர் வரை கொண்டு செல்ல வேண்டுமா , ஒரு ஓவர் முன்பே முடிக்க வேண்டுமா என்று முடிவு செய்பவர்களில் நானும் ஒருவன் .
நான் சொல்வதைப் பல பேர் கேட்பார்கள் . சில பேர் கேட்க மாட்டார்கள் . அவர்களை எப்படிக் கேட்க வைக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும் . என்ன என்னை வன்முறையாளன் என்று நினைக்கிறீர்களா ? நீங்கள் நினைப்பது தவறு . நான் ஒரு காந்தியவாதி . புரியவில்லையா . நான் சொல்வதைக் கேட்பவர்கள் மட்டும்தான் அணியில் இருக்க முடியும் .
கேட்காதவர்கள் அணியில் இருந்தாலும் பிளேயிங் 11 இல் இருக்க மாட்டார்கள் . இதை அவர்கள் வெளியே சொல்லி என்னை மாட்டி விடுவார்கள் என்று நினைக்கிறீர்களா ? யாரிடம் அவர்கள் சொல்வார்களோ அவர்களே என் அணி தான் . என் மேல் உங்களுக்குக் கோபம் வருகிறதா ? அது நியாயமே இல்லை .
மிக எளிமையாக ஜெயிக்க வேண்டிய மேட்சை கடைசி ஓவர் , கடைசி பால் வரை எடுத்துச் சென்று உங்களுக்கு ஒரு த்ரில்லிங்கான மேட்சைக் கொடுக்கும் என்னிடமே உங்களுக்குக் கோபமா ? இப்பொழுது என்னை மன்னித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் .
சமீப காலமாக எனக்கு ஒரு பிரச்சனை . ஒரே ஒரு பிளேயர் . அனிகேத் . அவன் தான் பிரச்சனை . ரஞ்சி ட்ராபியில் 200 ரன்கள் அடித்து மக்கள் சப்போர்டில் இந்திய அணிக்குள் நுழைந்தவன் . நீதி நியாயம் என்று பௌண்டரி லைனுக்கு வெளியேதான் பேசுவான் என்று பார்த்தால் உள்ளேயும் பேசுகிறான் .
முதலில் எனது உதவியாளனை அனுப்பி பேரம் பேச சொன்னேன் . அவன் ஒரு நல்ல negotiator . வரும் பொது அவன் மூக்கில் பிளாஸ்திரியோடு வந்தான் . பிறகு சில வீரர்களை அனுப்பி பணம் , பதவி என்று ஆசை கட்ட சொன்னேன் . மசியவில்லை . பின்பு நானே போய் மறைமுகமாக பேசினேன் . நீங்கள் என்னை லஞ்சம் வாங்க சொல்கிறீர்களா என்று நேரடியாகக் கேட்கிறான் .
ஒரே ஒருத்தன் தானே உங்கள் பேச்சைக் கேட்கவில்லை . மற்ற 10 பேரும் கேட்கிறார்களே பின்பு என்ன பிரச்சினை என்கிறீர்களா ? அணியில் யாருமே அடிக்கவில்லை என்றால் பிட்ச் சரியில்லை என்று சொல்லி சமாளித்து விடலாம் . ஒருவன் மட்டும் மிக எளிதாக 4,6 என்று விளாசி எடுக்கும் போது வேறு வழி இல்லாமல் மற்றவர்களும் விளையாட வேண்டி இருக்கிறது . சரி , இதற்கு மேலும் கதை சொல்லி உங்களை வெறுப்பேற்ற விரும்பவில்லை . காந்தியவாதி கையில் கத்தி . அவனைக் கொலை செய்ய முடிவு செய்து விட்டேன் . கிரௌண்டுக்கு வெளியே வைத்து செய்தால் நான் மாட்டிக் கொள்வேன் . கிரௌண்டுக்கு உள்ளேயே அவனைக் கொலை செய்ய முடிவு செய்து விட்டேன் . விபத்து போலவே இருக்க வேண்டும் . எதிரணி வீரர்களுக்கு பணம் கொடுத்து பாலை அவன் முகத்தில் எறிவது . அவனுக்குக் காயம் பட்டவுடன் தண்ணீரில் விஷம் கலந்து கொடுத்து விட்டு தலையில் அடிபட்டதால் இறந்து விட்டான் என்று கதை சொல்வது . ஒரு வேலை போஸ்ட்மார்ட்டம் நடந்தால் டாக்டரிடம் சொல்லி ரிப்போர்ட்டை மாற்றி எழுதுவது .
இதோ மேட்ச் நடந்து கொண்டு இருக்கிறது . முதலில் பேட் செய்த எதிரணி 50 ஓவ்ர்களின் முடிவில் 287 ரன்கள் எடுத்துள்ளது . இரண்டாவதாக பேட் செய்த இந்தியா 46 வருக்கு 246 ரன்கள் எடுத்திருக்கிறது . 150 ரன்களுக்கு 2 விக்கெட் போய் இருந்த போது இறங்கிய அனிகேத் 50 ரன்கள் எடுத்திருந்தான் . பேஸ் பௌலர்கள் பலமுறை முயன்றும் அவனுக்குக் காயத்தை ஏற்படுத்த முடியவில்லை . ஸ்பின் பௌலிங் வரும் பொது பொதுவாக ஹெல்மெட் அணியாமல் தொப்பியோடு விளையாடுவான் . அதுதான் என் பிளான் B . ஒரு வேளை பேஸ் பௌலர்களிடம் அவன் தப்பி விட்டால் ஸ்பின் பௌலர் பாலை அவன் முகத்தில் எறிவான் . அவனை ஸ்ட்ரெச்சரில் எடுத்து வரும் போது அவனுக்குத் தண்ணீர் கொடுப்பார்கள். அவனுக்குத் தண்ணீர் கொடுத்து விட போவதே நான் தான் . 47ஆவது ஓவரை என் அபிமான ஸ்பின் பௌலர் வீச வந்தான் . விஷத் தண்ணீர் பாட்டிலை ரெடியாக வைத்துக் கொண்டு முன் வரிசையில் அமர்ந்திருந்தேன் . எதிர் பார்த்தபடி பாலை அவன் முகத்திற்கு நேராக வீச அனிகேத் அதை வெறித்தனமாக அடிக்க , பால் வானத்திற்குப் பறந்தது . நான் தலையை உயர்த்திப் பார்க்க ஒரு நொடிக்குள் பால் என் மண்டையில் வந்து விழுந்தது . நான் லேசான மயக்கத்திற்கு செல்ல ஒரு ஆர்வக் கோளாறு ரசிகன் என்னை எழுப்பி சார் தண்ணி என்று கொடுத்தான் . அரை மயக்கத்தில் அதைக் குடிக்க சற்றென்று உறைத்தது . அது நான் கொண்டு வந்த விஷ தண்ணீர் . என்னை ஸ்ட்ரெச்சரில் வைத்து எடுத்துச் சென்றார்கள் .ஆஸ்பத்திரியை அடையும் வரையில் நான் உயிரோடு இருப்பேனா ? யாரவது சொல்லுங்களேன்
Comments
Post a Comment